புனித கிரி விகாரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம தேவாலய வளாகங்களில் இலங்கை வங்கி டிஜிற்றல் உண்டியல்களை (Digital Till) நிறுவியுள்ளது. இதன் மூலம், ஆலயங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் QR குறியீட்டு அடிப்படையிலான டிஜிற்றல் தொழில்நுட்பத்தினூடாகத்தங்களது நன்கொடைகளையும் காணிக்கைகளையும்பாதுகாப்பாகவும்இலகுவாகவும் வழங்க முடியும்.
அரசாங்கத்தினதும் இலங்கை மத்திய வங்கியினதும் டிஜிற்றல்மயமாக்கல் இலக்குகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், அன்றாடப் பரிவர்த்தனைகளுக்காகப் பாதுகாப்பான, வசதியான மற்றும் நவீன QR பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளை இலங்கை வங்கி தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள இவ்வுண்டியல்கள் மூலம் பக்தர்கள் பாதுகாப்பான டிஜிற்றல் முறையினூடாகக் காணிக்கைகளைச் செலுத்த வழிவகுக்கப்பட்டுள்ளதால், வழிபாட்டுத் தலங்களில் பணப் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் ஊடாகச் செலுத்தப்படும் நன்கொடைகள் நேரடியாக அந்தந்த ஆலயங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதுடன், பொறுப்பான அதிகாரிகளுக்கு அதுகுறித்த குறுஞ்செய்தி (SMS) அறிவிப்புகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இச்செயன்முறையானது பணப்பரிவர்த்தனைகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், கணக்கேடுகளைச் சீராகப் பேணவும், கணக்காய்வு நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக அமையவும் உதவும்.
கதிர்காமம் கிரி விகாரை வளாகத்திலான டிஜிற்றல் உண்டியல் நிறுவல் திட்டம், கதிர்காம கிரி வெஹெர ரஜ மகா விகாரையின் விஹாராதிபதி, நான்கு மகா விகாரைகள் மற்றும் ருஹுனு மகா ஹம்பாந்தோட்டைப்பிரிவின் பிரதான சங்கநாயக்க, கதிர்காம சாசனரக்ஷக பலமண்டலத்தின் தலைவர் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட சங்க சம்மேளனத்தின் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கும் மதிப்பிற்குரிய கோபவக தமிந்த தேரர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலய வளாகத்திலான நிறுவல் பணிகள், அதன் பஸ்நாயக்க நிலமேயின் இணக்கத்துடன் இடம்பெற்றன. இந்நிகழ்வில், கதிர்காம தேவாலயத்தின் நிர்வாக அதிகாரி இ. எம். சனத் ஏக்கநாயக்க, இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வை. ஏ. ஜயதிலக்க, அபிவிருத்தி மற்றும் கிளை வங்கித் தொழிற்பாடுகள் பிரிவின் பதில் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் பத்ர கல்யாணப்பிரிய குருசிங்க, மனிதவளத் தொழிற்பாடுகள் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் தம்ம விஜேவர்தன, பிரதம சந்தைப்படுத்தல்அதிகாரி சமீர டி. லியனகே, அத்தியாவசிய சேவைகள் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் குமுதினி ஜே. யோகரத்தினம் மற்றும் இலங்கை வங்கியின் தென் மாகாணப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த டிஜிற்றல் பணப்பரிவர்த்தனைத் தளத்தின் மூலம், கிரி விகாரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள், இனிவரும் காலங்களில் நவீன, பாதுகாப்பான மற்றும் எளிய முறையைப் பயன்படுத்தித் தங்களது காணிக்கைகளை இலகுவாகச் செலுத்த முடியும்.