சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கை நான்கு நூற்றாண்டுகளாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. காலனித்துவ அதிகாரிகள் வியாபாரத்திலும், தொழிற்றுறையிலும் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர். இலங்கை பிரஜைகள் வியாபாரிகளாலும், வட்டிக்கு பணம் வழங்குபவர்களாலும் சுரண்டப்பட்டு பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
புதிய சீர்திருத்தங்களை அடுத்து, 1934 இல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட வங்கி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையில் ஒரு தேசிய வங்கியை நிறுவுவதற்கு இலங்கை அரச பேரவை ஒப்புதல் வழங்கியது.
இலங்கையிலுள்ள தொழில்முனைவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு தேசிய வங்கியை உருவாக்க வேண்டியதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டது. பொருளாதாரத்தை பன்முகப்படுத்த முற்போக்கான அளவில் அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சி தேவைப்பட்டது.
நமக்கென்று ஒரு வங்கி ஸ்தாபிக்கப்பட்டபோது மறுமலர்ச்சி ஏற்றப்பட்டதுடன் நாட்டு மக்கள் வங்கியைச் சூழ அணிதிரண்டனர். இலங்கை வங்கி, இவ்வாறு மக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் நிதித் தேவைகளை சரியாக இணங்கண்டு, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி, வர்த்தகத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, வர்த்தகத்தை மேம்படுத்தி எம் மக்களின் வளர்ச்சிக்கு ஊக்கியாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
இவ்வாறு உருவாக்கப்பட்ட நிதிச் சுதந்திரமானது, நானூறு ஆண்டுகால அந்நிய ஆதிக்கத்திற்குப் பிறகு, தேசத்திற்கு முதல்முறையாக, நிதிச் சுயாட்சியின் உண்மையான மதிப்பை உணர்த்தவும், புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் அதன் மூலம் தேசிய சுதந்திரத்திற்கான அபிலாஷையைத் தூண்டவும் ஒரு உத்வேகத்தை அளித்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தனது புகழ்பெற்ற ‘கெட்டிஸ்பர்க்’ உரையில் வெளிப்படுத்திய மனதைத் தொடும் வார்த்தைகளை இங்கு நாம் நினைவுகூர்வதோடு அவரது மேற்கோளை ‘இலங்கை வங்கி - மக்களால், மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட வங்கி' என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்’ என எமக்கேற்றவாறு மாற்றியமைக்க விழைகிறோம்.
1939 - 1950
மக்களுக்கு நிதிச் சுதந்திரத்தை உருவாக்குதல்
கொழும்பின் வணிகப் பெருநகரமான கோட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியானது 1939 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கையின் ஆளுநர் சேர் ஆன்ட்ரூ கால்டெகொட் அவர்களால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பணப் பரிமாற்ற வங்கிகள் மற்றும் முறைசாரா பணக் கடன் வழங்குபவர்களின் வலுவான போட்டிக்கு எதிராக உதயமான முதல் உள்நாட்டு வங்கியான இலங்கை வங்கியின் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாததாக இருந்தது.
1941 இல் முதல் வெளி மாவட்டக் கிளை கண்டி நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை நகரங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. இலங்கை வங்கி ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் வாடிக்கையார்களுக்கும் வங்கிக்கும் ஏற்பட்ட தொடர்புகளை சரியாகப் பயன்படுத்திய இலங்கை வங்கி 1949 இல் அதன் சர்வதேசக் கிளையை லண்டனின் மையப்பகுதியில் ஆரம்பித்தது.
1950 – 1975
விவசாய உற்பத்தியை உருவாக்கும் கிராமங்களைச் சென்றடைதல்
1961 இல் இலங்கை வங்கி தேசிய அபிவிருத்தி மூலோபாய முயற்சிகளுக்கு வசதியாக தேசியமயமாக்கப்பட்டது. நடைமுறையில் உள்ள அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மூலம் தேசத்தின் அபிலாஷைகளை வங்கி நிறைவேற்ற உறுதிபூண்டது.
1972 ஆம் ஆண்டில், விவசாய உற்பத்திச் சட்டத்தை இயற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விவசாய சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக, கிளை வலையமைப்பு இலங்கையின் பெரும்பாலான கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது. இந்த சகாப்தம் கிராமப்புற விவசாய சமூகங்களுக்கு மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. புதிய வாய்ப்புகள் இலங்கைத் தீவு முழுதும் விவசாய உற்பத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கின.
1975 – 2000
எங்கள் இணையற்ற பயணம் ஏனைய நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது
திறந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக இலங்கை வணிக வங்கித் துறையில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. அதன் தொடர்ச்சியாக, இலங்கையின் வர்த்தக வங்கித் துறைக்கு தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இலங்கை வங்கி முன்னோடியாக இருந்தது. 1979 ஆம் ஆண்டில் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தாராளமயமாக்கியதன் விளைவாக இலங்கையில் முதல் வெளிநாட்டு நாணய வங்கி அலகு (FCBU) வங்கியால் உருவாக்கப்பட்டது.
இலங்கை வங்கி, நான்கு பிராந்திய அலுவலகங்களை அமைத்து வங்கியின் செயற்பாடுகளை அவற்றின் கீழ் நிறுவியது. 70களின் பிற்பகுதியில், நாடளாவிய ரீதியில் காணப்பட்ட கிளை வலையமைப்பு, வணிகங்களின் பெருக்கம், வெளிநாட்டுக் கிளைகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக வங்கி புதிய பல உயரங்களை எட்டியது. இலங்கை வங்கி வணிக வங்கி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அமைக்கப்பட்ட துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் பிற வணிகங்களில் நுழைய ஆரம்பித்துடன் 1981 இல் வங்கி மாலைதீவு குடியரசின் தலைநகரான மாலேயில் இன்னொரு சர்வதேசக் கிளையைத் திறந்தது.
1982 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் வர்த்தக வங்கியான வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கி இலங்கை வங்கியால் திறந்து வைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில், வரையறுக்கப்பட்ட ஆதன அபிவிருத்தி நிறுவனம் நிறுவப்பட்டதன் பயனாக வங்கியின் அனைத்து நிர்வாக அலுவலகங்கள், சர்வதேசப் பிரிவு, பெருநிறுவன வாடிக்கையாளர்களதும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களதும் நலனுக்காக இன்னும் இரண்டு கிளைகளை உள்ளடக்கி 32 அடுக்குமாடி கொண்ட புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டது.
1989 இல், இலங்கையில் முதன்முறையாக, இலங்கை வங்கி VISA இன்டர்நேஷனலுடன் இணைந்து Ceybank Visa கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தியதுடன் புதிய நூற்றாண்டில் பல புதுமையான வசதிகளை அறிமுகப்படுத்தியது. 1995 இல் வங்கி மற்றொரு வெளிநாட்டுக் கிளையை இந்தியாவின் சென்னையில் ஆரம்பித்தது.
2000 – 2020
மக்களின் இதயங்களையும் நம்பிக்கையையும் வென்றது
2005 ஆம் ஆண்டில், இலங்கை வங்கி தனது கிளை வலையமைப்பை ஒரே இணையவழிக் கட்டமைப்பிற்கு கொண்டு வருவதற்கான புரட்சிகர முயற்சியில் இறங்கியதுடன் 2009 ஆம் ஆண்டில் அத்திட்டத்தை நிறைவு செய்தது. இது வங்கிக்கு பயன்மிக்கவோர் வரலாற்றுச் சிறப்புமிகு நகர்வாக அமைந்தது. 2008 ஆம் ஆண்டில், வரலாற்றில் முதல் முறையாக 5 ஆண்டுகளுக்கு தொகுதிக் கடன் பத்திரம் மூலம் பொது மக்களிடமிருந்து 4.2 பில்லியன் ரூபாய் முதலீட்டினைத் திரட்டி கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலில் இடம்பெற்றது இலங்கை வங்கி. இது, நாட்டு மக்கள் இலங்கை வங்கி மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையை எடுத்துக்காட்டியது.
2010 இல், வங்கி லண்டனில் உள்ள தனது கிளையை துணை நிறுவனமாகச் செயற்படும் முழு அளவிலான வங்கியாக மேம்படுத்தியதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தில் அதன் செயற்பாடுகளை பன்முகப்படுத்தியது. நமது நாட்டிற்கு அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் முக்கியமான தளமாக வங்கி விளங்குகிறது. வங்கி தனது மூன்றாவது வெளிநாட்டுக் கிளையை 2014 இல் சீஷெல்ஸில் நிறுவியது. இலங்கை வங்கி, புத்தாக்கம் தொடர்பாக அதிக கவனம், சேவையின் சிறப்பு, பல்வகைப்படுத்தல், விற்பனைத் திறன், நிர்வாகம் மற்றும் இடர் கட்டுப்பாடு ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்வதில் சுறுசுறுப்புடனும் செயலூக்கத்துடனும் செயற்பட்டுவருவதோடு நாடளாவிய ரீதியில் செயற்படும் இஸ்லாமிய வங்கிப் பிரிவையும் தொடங்கியது.
இரண்டாவது ஐந்தாண்டுத் தொகுதிக் கடன் முறியை வெளியிட்டு ரூ.5 பில்லியன் வெற்றிகரமாக திரட்டப்பட்டது. மேலும் வங்கியானது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ரூ.10 பில்லியன் தொகுதிக் கடன் முறி வெளியீட்டில் வங்கியாளர், முகாமையாளர், அனுசரணையாளர் மற்றும் பதிவாளர் எனப் பல பாத்திரங்களை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
2020ஐப் பொறுத்தவரை கொவிட் தொற்றுநோய் நெருக்கடியின் மூலம் பாதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரச துறைகளுக்கு ஆதரவளிப்பதே வங்கியின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவுவதன்மூலம் நெருக்கடிகளைச் சமாளித்து பொருளாதார மறுமலர்ச்சியை உண்டாக்கும் பொறுப்பு நாட்டின் வங்கித்துறை முன்னோடியான இலங்கை வங்கிக்கும் காணப்பட்டது.
பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலை, தொடர்ந்து குறைந்து சென்ற வட்டி விகிதம், மீளச்செலுத்தப்படாக் கடன்கள் என 2020 சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வங்கியானது குறைந்த வட்டி விகித வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வசதிகளையும் தவணைத் தள்ளுபடிகளையும் வழங்கி நாட்டின் பொருளாதார மீட்சிக்காகப் பாடுபட்டிருந்தாலும் இவை வங்கியின் நிதியாற்றலைப் பெரிதும் பாதித்தன.
2021- 2025
நெருக்கடிகளின் மத்தியிலும் வளமான எதிர்காலத்தை நோக்கி
86 வருடங்களாக வங்கித்துறையில் முன்னோடியாக விளங்கும் எங்களின் வளர்ச்சியானது தனிச்சிறப்பு வாய்ந்தது. இதுவரை காலமும் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நாம் இம்முறை முழு உலகையும் இடரில் ஆழ்த்திய கொவிட் எனும் பேராபத்தை எதிர்கொண்டுள்ளோம். இது எங்கள் மக்களின் வாழ்க்கையை பாதித்து பொருளாதார ஸ்திரத்தன்மையை பாரிய அளவு வீழ்ச்சியுறச்செய்தது. இப் பேரிடரின் மத்தியிலும் 2.9 ட்ரில்லியன் ரூபாய் சொத்துத் தளத்துடனும் வலுவான உலகளாவிய கிளை வலையமைப்புடனும் நாம் இன்றும் நாட்டின் அசைக்க முடியாத நிதி நிறுவனமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
நாட்டின் முதலாவது அரச வங்கியாகிய இலங்கை வங்கி இலகுவில் இந்த இடத்தை அடைந்துவிடவில்லை. இலங்கை வங்கித் துறையில் முன்னோடி என்ற இடமும் நிதிச் சேவைத் துறையில் நமக்கிருக்கும் அளப்பரிய ஆற்றலுமே இலங்கைத் திறந்த பொருளாதாரக் கட்டமைப்பில் உலகளாவிய வங்கித்துறைப் போட்டிகளுக்கு மத்தியில் இந்நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் வல்லமையை வழங்கின.
கொவிட் தொற்றுநோயின் மிக இக்கட்டான சூழ்நிலைகளை நாம் ஓரளவு கடந்துவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் 2021ஆம் ஆண்டுக்குள் பயணிக்கும் நாம் இனிவரும் காலங்களில் எதிர்கொள்ளவுள்ள சவால்களையும் ஒருகைபார்க்கக் காத்திருக்கிறோம்.
வங்கித் துறையில் முன்னோடி என்ற வகையில், நாட்டின் சவாலான காலங்களில் முன்னின்று தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுவதன் மூலமும் நாட்டின் முக்கிய தொழிற் துறைகள் மற்றும் தேசிய நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றுக்கு உதவுவதன் மூலமும் நாட்டின் முன்னேற்றப் பாதையில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவோம்.
பல ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பத்துடன் எமக்கிருக்கும் அனுபவம் காரணமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக நாடு முழுவதும் புதிய பொருளாதார முறைமைக்கு வழிசமைத்து எமது வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தோம். நிதித்துறை முன்னோடி என்ற எமது இடத்தை நிலைநிறுத்தும் பொருட்டு புதிய புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி காலத்தோடு ஓடுவோம். ஒவ்வொரு முறையும் வெற்றிச் சிகரத்தை எட்டும்போதும் அவ்வெற்றியை எமது வாடிக்கையாளர்களுடனும் பங்கீடுபாட்டாளர்களுடனும் எமதருமை மக்களுடனும் பகிர்ந்துகொள்வோம்.
நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம். எதிர்காலத்திலும் உங்களுடனும் வரவிருக்கும் பல தலைமுறைகளுடனும் நெடுந்தூரம் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.