ஒரு கல்விக்கூடமாகவும் பொதுமக்கள் தொடர்புக் கருவியாகயும் செயற்படும் வகையில் இலங்கை வங்கியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பணம் மற்றும் வங்கியியல் அருங்காட்சியகம் கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் 28ஆவது மாடியில் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் பல நவீன கட்டடக்கலை எண்ணக்கருக்களையும் வடிவமைப்பு எண்ணக்கருக்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் வடிவமைப்பும் இதே போன்ற எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகிறது. நாட்டில் உள்ள மிக நவீன அருங்காட்சியகங்களில் ஒன்றாக இலங்கை வங்கியின் அருங்காட்சியகத்தையும் குறிப்பிடலாம். இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத "பாடசாலைச் சுற்றுலா" அனுபவத்தை உருவாக்கும். குறிப்பாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாணயங்கள் வரலாறு தொடர்பான எமது தேடலைத் தூண்டுவிடும் என்பதோடு சராசரி சுதேசிகளும் (இவ்வாறுதான் அப்போது நாம் அறியப்பட்டிருந்தோம்) அனுபவிக்கும்படி இவ்வாறனவொரு நவீன வங்கிச் சேவையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த எமது வங்கியியல் முன்னோடிகளின் தொலைநோக்கு, தைரியம் குறித்த பிரமிப்பையும் உருவாக்கும்.

BOC - Museum
BOC - Museum

முக்கியமாக வருடாந்த பாடசாலைச் சுற்றுலாக்களின் ஒரு பகுதியாக இலங்கை வங்கி கட்டடத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே இவ்வருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. (இலங்கை வங்கியின் தலைமை அலுவலகம் பாடசாலை மாணவர்கள் பார்வையிடும் பல இடங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் அருங்காட்சியகம், அதே தளத்தில் உள்ள காட்சிக்கூடம்/மாடம், "காசி தோரணம்" என்று குறிப்பிடப்படும் முதலாம் மாடியில் உள்ள சிற்பம், இலங்கை வங்கியின் திறைசேரிப் பிரிவின் வணிகர்கள் கணினிக் கட்டுப்பாட்டு முனையங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் Dealing Room எனப்படும் பகுதி என்பன குறிப்பிடத்தக்கது)

அருங்காட்சியகமும் அதன் சுற்றுப்புறமும் பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளன

முகப்புக்கூடம்
BOC - Museum

முகப்புக்கூடம் என்பது அருங்காட்சியகத்தின் நுழைவாயிலாகும். இது அருங்காட்சியகத்தின் அமைப்புமுறை, குறிக்கோள்கள் என்பவற்றை வழங்குவதோடு ஒரு அருங்காட்சியகத்துக்கே உரித்தான இதமான சூழலையும் நல்லுணர்வுகளையும் பார்வையாளர்களிடத்தே கடத்துவதாக அமையப்பெற்றுள்ளது.

கேட்போர்கூடம் / காட்சிக்கூடம்
BOC - Museum

ஏறக்குறைய 55 பேர் அமரக்கூடிய வசதியைக்கொண்டுள்ள இக்காட்சிக்கூடம் இங்கு வருகை தரும் பள்ளிக் குழந்தைகளுக்கு எமது நாட்டின் வணிக நடவடிக்கைகளின் வரலாறு உள்ளிட்ட அருங்காட்சியகம் தொடர்பான பல விடயங்களைக் காணொலிக் காட்சிகளாகக் காண்பிக்கின்றது.

பிரதான காட்சிப்படுத்தற் பகுதி
BOC - Museum

இது நாணயக் குற்றிகள் மற்றும் தாள்கள், இலங்கை வங்கி, நவீன வங்கியியல் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், வளைவான சுவரூடே அமையப்பெற்றுள்ள இப்பகுதி தகவல்களின் காலவரிசையையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொண்டிருப்பதோடு இருண்ட அறை ஒன்றையும் கொண்டுள்ளது.

நாணயக் குற்றிகள் மற்றும் தாள்கள் பகுதி
BOC - Museum

இங்கு முற்கால நாணயக் குற்றிகளும் தாள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு இப்பகுதி பினவரும் உட்பிரிவுகளையும் கொண்டுள்ளது.

  • புராதன காலம் (முற்காலம் தொடக்கம் கி.பி. 700 வரையான காலப்பகுதி)
  • மத்திய காலம் (கி.பி. 700 - 1500)
  • கொலனித்துவக் காலம் (கி.பி. 1500 -1950) 
  • நவீன காலம் (1950 தொடக்கம் இன்று வரை)

பயன்பாட்டில் இருந்த முத்திரை நாணயங்கள், அக்குரகொட சேகரிப்பு நாணயங்கள், மன்னர்களின் பெயர்களைக் கொண்ட தங்க "ரன் கஹவனு" நாணயங்கள், போர்ச்சுகல், ஒல்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று ஐரோப்பிய சக்திகளின் நாணயங்கள், கம்பனிகளால் வழங்கப்பட்ட கோப்பி டோக்கன்கள் மற்றும் நாணயத் தாள்கள் முதலானவற்றின் காட்சிப்படுத்தல்கள் பாரவையாளர்களின் கவனத்தை ஈர்ப்பவையாகக் காணப்படுகின்றன. பார்வையாளர்கள் நாணயக் குற்றிகள் மற்றும் தாள்களைப் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு உட்பிரிவிலும் தொடுதிரை ஒன்று காணப்படுகிறது.

இலங்கை வங்கிப் பிரிவு
BOC - Museum

நாட்டு மக்களின் நிதிசார் தேவைகளுக்கான பதிலாக இலங்கை வங்கி உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்த வரலாற்றுச் சம்பவங்களும் அன்றுதொடக்கம் இன்றுவரை இலங்கை வங்கி கடந்துவந்த இந்நீண்ட நெடிய பயணத்தையும் விவரிப்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. 

பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் பொருட்டு பிரித்தானிய, ஐரோப்பிய வங்கிகள் கிளைகளை நிறுவப்பட்டமை, தோட்டப் பொருளாதாரத்தில் பங்கேற்பதில் இலங்கைச் சுதேசிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள், புகழ்பெற்ற இந்திய பார்சி வங்கியாளர் சேர் சொராப்ஜி போச்கனாவல தலைமையிலான இலங்கை வங்கி ஆணைக்குழு உருவாக்கப்பட்டமை,1939 இல் இலங்கை வங்கியின் உதயம் என்பவற்றை இக்கதைகள் விவரிக்கின்றன.

மையில் தொட்டு எழுதும் பேனாக்கள் மற்றும் "G" முனைப் பேனாக்கள் என்பவற்றைக் கொண்டு எழுதப்பட்ட பேரேடுகள், கணக்கீட்டு இயந்திரங்கள், இலத்திரனியற் கணிப்பான்கள் முதலான வங்கிகளில் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் புத்தகங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவைதவிர நாட்டின் முதற் பிரதமரினதும் அவருக்குப் பின் பதவியேற்றவரினதும் கையொப்பங்கள் அடங்கிய சில ஆவணங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை வங்கியில் பிரஜை ஒருவர் பங்குகளைப் பெறுவதற்கு விண்ணப்பித்த ஆவணங்களின் தொகுப்பு முதலான சில வரலாற்று ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

நவீன வங்கியியற் பிரிவு
BOC - Museum

இந்த பிரிவின் வடிவமைப்பு வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதோடு இப்பகுதியில் பார்வையாளர்களுக்கு (பாடசாலை மாணவர்கள்) நவீன வங்கியியல் அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

வளைவுச் சுவர்
BOC - Museum

இலங்கை வங்கியின் தலைமை அலுவலக கட்டடமானது ஒரு வட்டமான தரைப்பகுதியைக் கொண்டுள்ளது. அந்த வகையில் அருங்காட்சியகப் பிரிவின் உட்புறத்தில் உள்ள வளைந்த சுவர் மூன்று முக்கிய காட்சிப்படுத்தற் பிரிவுகளை இணைக்கப் பயன்படுகிறது. இதன் கீழ்ப்பகுதியில் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நிகழ்ந்த முக்கிய வங்கித்துறை நிகழ்வுகள் காலவரிசையாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுக்கு வங்கித்துறை பற்றிய வரலாற்றுக் கண்ணோட்டத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முக்கிய விடயங்களுக்கான விரிவான விளக்கங்களையும் இச்சுவர் தாங்கிநிற்கிறது. மேலும் இச்சுவர் வணிகத் துறையின் வளர்ச்சி, பணத்தின் தோற்றம் பற்றிய சுருக்கமான விவரணத்தையும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் மாதிரித் தகவல்கள், "பொற்காசுகளிற்" காணப்படும் பல்வேறு குறியீடுகள், பொலனறுவைக் கால நாணயங்களில் உள்ள எழுத்துகளின் விளக்கங்கள் போன்ற சுவாரஸ்யமான தகவல்களையும் தருகிறது. ‘இலங்கை வங்கி’ எனும் பிரிவு 1925இல் செட்டியார்களின் வணிகத்தில் ஏற்பட்ட நெருக்கடி, 1929 ஆம் ஆண்டின் அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சி, "பொருளாதாரப் பெருமந்தம்" என அழைக்கப்படும் உலகப் பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தையும் விவரிக்கிறது.

இருட்டறை
BOC - Museum

இது சாதாரண விளக்குகளாலும் புற ஊதா (UV) விளக்குகளாலும் அமைக்கப்பட்ட ஜன்னல்கள் இல்லாத அறையாகும். ஆகவே புற ஊதாக் கதிர்களின் வெளிச்சத்தில் மட்டுமே தெரியும் நவீன நாணயத் தாள்களின் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்களை பார்வையாளர்கள் இங்கு பார்க்க முடியும்.

கொழும்பு நகரை 360 பாகை கோணத்தில் பார்ப்பதற்கான திறந்த வெளி மாடம்
BOC - Museum

அருங்காட்சியகம் அமைந்துள்ள 28வது மாடிக் கட்டடத்தைச் சுற்றி அமைந்துள்ள திறந்த வெளி மாடத்திலிருந்து பார்வையாளர்கள் கொழும்பு நகரை 360° பாகை கோணத்தில் பார்த்து இரசிக்க முடியும்.

அருங்காட்சியகத்தைப் பார்வையிடல்

அருங்காட்சியகம் எந்நேரமும் திறந்து வைக்கப்படுவதில்லை என்பதால் பார்வையாளர்கள் வருவதற்கு முன்னர் கீழேயுள்ள முகவரிக்கு கோரிக்கைக கடிதம் ஒன்றை அனுப்பி முன்னனுமதி பெறவேண்டும்.

அருங்காட்சியகக் காப்பாளர்,
அருங்காட்சியக அலுவலகம், 30ஆம் மாடி, இலங்கை வங்கித் தலைமையகம், இலங்கை வங்கிச் சதுக்கம், இல. 01, இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

அருங்காட்சியகத்திற்கு வருவதற்கு உத்தேசித்துள்ள திகதிக்கு முன்பே கடிதம் அனுப்பப்பட வேண்டும் அல்லது முன்பதிவு கோரிக்கைப் படிவத்தை நிரப்புவதன் மூலம் நேரடியாக அனுமதி கோரலாம். பாடசாலை மாணவர்கள் எனின் அனுமதி வழங்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டவுடன், வருகை தரும் மாணவர்களின் அனைவரது முழுப் பெயர்களையும் சரியாகக் குறிப்பிட்டு பட்டியல் ஒன்றை அனுப்ப வேண்டும். இலங்கை வங்கியின் பல்வேறு பரிசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படக்கூடிய ஏதேனும் சிறப்புப் பரிசுகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கே இவ்வாறான பெயர்ப்ட்டியல் கோரப்படுகின்றது.

கோரிக்கைக் கடிதத்தில் திறந்த வெளி மாடத்திலிருந்து பார்ப்பதற்கான அனுமதியும் கோரப்பட்டிருந்தால் மட்டுமே திறந்த வெளி மாடத்திற்கு அனுமதி வழங்கப்படும். அருங்காட்சியகம் மற்றும் திறந்த வெளி மாடம் ஆகிய அனைத்தும் உயர் பாதுகாப்புப் பகுதியாக கருதப்படுவதால் அனுமதி வழங்குவது முற்றிலும் இலங்கை வங்கியின் தற்றுணிபுக்கு உட்பட்டது என்பதோடு எவ்விதக் காரணத்தையும் கூறாமல் அனுமதி மறுக்கும் உரிமையும் வங்கிக்கு உண்டு.

அருங்காட்சியகத்திற்குள் சாதாரணமாக 50 நபர்களே அனுமதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கைக்கு அதிகமான குழுக்கள் ஆகக்கூடியது 55 நபர்களைக் கொண்ட குழுக்களாகப் பிரித்து அருங்காட்சியகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவர். ஆகப் பெரிய குழுக்களுக்கான அனுமதி (பெரும்பாலும்) மறுக்கப்படலாம் என்பதை நினைவிற்கொள்க.

வருகை தரும் மாணவர்களை ஆசிரியர்கள்/பாதுகாவலர்கள் கவனமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வங்கி உறுதியாக இருப்பதால் அனுமதி கோரும் பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களுடன் வரும் ஆசிரியர்கள்/பாதுகாவலர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும்.

அருங்காட்சியகத்தைப் பார்வையிடல்


பிரதான தொடர்பு விபரங்கள்

பிரதான தொடர்பு விபரங்கள்



தொடர்புகளுக்கு

அருங்காட்சியகக் காப்பாளர்,
அருங்காட்சியக அலுவலகம், 
30ஆம் மாடி, 
இலங்கை வங்கித் தலைமையகம், 
இலங்கை வங்கிச் சதுக்கம், 
இல. 01, இலங்கை வங்கி மாவத்தை, 
கொழும்பு 01.

தொலைபேசி:  0112205335 / 011 220 5336  
தொலைநகல்: 011 232 1160
மின்னஞ்சல்: museum@boc.lk