director-image

திருமதி. குமுதினி ஜே. யோகரத்னம்

பிரதிப் பொது முகாமையாளர் (உதவிச் சேவைகள்)

திருமதி. குமுதினி ஜே. யோகரத்னம் அவர்கள், 2026 ஜனவரி மாதம் இலங்கை வங்கியின் உதவிச் சேவைகள் பிரிவிற்கான பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.

வணிக வங்கித் துறையில் 29 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவம் கொண்ட இவர், பொது வங்கியியல், கடன் செயற்பாடுகள், கரைகடந்த வங்கியியல் மற்றும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகளில் விசேட நிபுணத்துவம் பெற்றவராவார். கிளை மட்டத்திலான செயற்பாடுகள் முதல் தலைமை அலுவலகத்தின் கொள்கை வகுப்புப் பொறுப்புகள் மற்றும் Portfolio முகாமைத்துவம் வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள இவர், உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிச் சூழல்கள் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார்.

திருமதி. குமுதினி ஜே.யோகரத்னம் அவர்கள் பிரித்தானியாவில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கி தனியார் நிறுவனம், மாலைத்தீவு கிளை மற்றும் சென்னை கிளை என பல்வேறு வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றி 11 ஆண்டுகால சர்வதேச வங்கியியல் அனுபவத்தைக் கொண்டுள்ளார். குறிப்பாக, 2020 முதல் 2024 வரை இலங்கை வங்கியின் சென்னை கிளையின் இலங்கைக்கான முகாமையாளராக பணியாற்றி, இந்தியாவில் வங்கியின் செயற்பாடுகளுக்கு மூலோபாய தலைமைத்துவத்தை வழங்கினார். இதற்கு முன்னதாக, 2016 முதல் 2019 வரை சென்னை கிளையின் பிரதி முகாமையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், வங்கியின் கரைகடந்த வங்கிப் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றி, அதன் செயற்பாடுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இலங்கை வங்கியில் தனது நீண்டகாலப் பயணத்தில் பல்வேறு சிரேஷ்ட தலைமைப் பதவிகளை இவர் வகித்துள்ளார். தற்போதைய பதவிக்கு முன்னதாக, கரைகடந்த வங்கிப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளராகவும், அதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்திற்கான மாகாண உதவிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றி, வங்கியின் பிராந்திய செயற்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

1997 ஆம் ஆண்டு முகாமைத்துவ பயிலுநராக இலங்கை வங்கியில் இணைந்த இவர், வணிக வங்கித் துறையின் அனைத்து முக்கிய பிரிவுகளிலும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கு அப்பால், வங்கியின் மத்திய பயிற்சி நிறுவனம், இலங்கை தொழிற்துறை அபிவிருத்திச் சபை மற்றும் வங்கியினால் முன்னெடுக்கப்படும் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் வளவாளராக இணைந்து, அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

திருமதி. குமுதினி ஜே. யோகரத்னம் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு) பட்டத்தை பெற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் முகாமைத்துவக் கற்கைகள் நிறுவனத்தில் (PIM) வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தையும் (MBA) பெற்றுள்ளார்.

இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் (IBSL) இணை உறுப்பினராகவும், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் (CA Sri Lanka) உரிமம் பெற்றவராகவும், இலங்கை தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளார்.

2020 முதல் 2024 காலப்பகுதியில் இந்தியாவின் உள்ள இந்தோ-ஆசியான் இலங்கை வர்த்தக சபையின் முனைப்பான குழு உறுப்பினராக இருந்துள்ளார்.