திரு. வை.ஏ. ஜயதிலக்க
பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
திரு வை.ஏ. ஜயதிலக்க இலங்கை வங்கியின் பதில் பொது முகாமையாளராக / பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2025 ஓகஸ்ட் 06ஆம் திகதியிலிருந்து பணியாற்றி, 2026.02.27ஆம் திகதியன்று இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிகளில் உறுதிப்படுத்தப்பட்டார். இவர் பெப்ரவரி 2020 இல் வங்கியின் நிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டதிலிருந்து, துணைச் சேவைகள், மாகாண அறவிடற் பிரிவு, அபிவிருத்தி வங்கியியல், கிளைக் கடன் செயற்பாடுகள், வங்கித் தயாரிப்புகள் மற்றும் வங்கித்துறை அபிவிருத்தி முதலான பிரிவுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளராகப் பதவி வகித்துள்ளார்.
திரு. ஜயதிலக்க, நிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன் 2015 முதல் நிறைவேற்று முகாமைத்துவ உறுப்பினராக 05 ஆண்டுகள் செயற்பட்டதோடு, மத்திய மாகாண உதவிப் பொது முகாமையாளர், மாகாண விற்பனை முகாமைத்துவத்தின் உதவிப் பொது முகாமையாளர், வங்கித் தயாரிப்பு மேம்பாடுகள் மற்றும் வியாபாரச் செயன்முறை மீள்கட்டமைப்புப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்திருந்தார்.
சில்லறை வங்கியியல், திறைசேரி மற்றும் கடல்கடந்த வங்கிச் செயற்பாடுகள், திட்ட முகாமைத்துவம், வங்கித் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைப் புத்தாக்கங்கள் முதலான துறைகளில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. ஜயதிலக்க, BOC (UK) லிமிடெட்டில் Core Banking மற்றும் வர்த்தக நிதி முறைமைகளை செயற்படுத்துதல், கொழும்பிலுள்ள தலைமையகத்தில் Core Banking மற்றும் டெல்லர் முறைமைகளை மேம்படுத்துதல் மற்றும் பணி ஒழுங்குக்கான தானியங்கி முறைமையை அறிமுகப்படுத்துதல் ஆகிய வங்கியின் முக்கிய திட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளமாணி (சிறப்பு) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் முதுமாணி (நிதி) பட்டமும், வங்கி மற்றும் நிதித்துறையில் டிப்ளோமாவும் பெற்றுள்ள திரு. ஜயதிலக்க இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் உறுப்பினராக விளங்குவதோடு ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின் கற்கைகள் நிறுவகத்தில் மூலோபாய முகாமைத்துவத்தில் உயர் கற்கைநெறி ஒன்றையும் பிரான்ஸ் நாட்டின் INSEAD பல்கலைக்கழகத்தில் உயர் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் (AMP) ஒன்றையும் நிறைவுசெய்துள்ளார்.
இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற உயரிய பதவிக்கு மேலதிகமாக திரு. ஜயதிலக்க வரையறுக்கப்பட்ட ஆதன அபிவிருத்தி நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஹொட்டேல்ஸ் கொழும்பு (1963) நிறுவனம், வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கி ஆதன அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ (தனியார்) நிறுவனம், வரையறுக்கப்பட்ட சீபாங் ஹொலிடே ஹோம்ஸ் (தனியார்) நிறுவனம், வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கி முகாமைத்துவ மற்றும் துணைச் சேவைகள் (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் சபைப் பணிப்பாளராக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.