கவிந்த டி சொய்சா
தலைவர், இலங்கை வங்கி
திரு.காவிந்த டி சொய்சா 2300இற்கும் அதிகமான சேவை மையங்கள் 650இற்கும் அதிகமான கிளைகளை உள்ளடக்கிய வலையமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம், இந்தியா, மாலைத்தீவு மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ள இலங்கையின் மிகப்பெரிய வணிக வங்கியாகத் திகழும் இலங்கை வங்கியின் தலைவராக/ நிவாகம் சாரா பணிப்பாளராக 2024ஆம் நவம்பர் மாதம் தொடக்கம் பதவி வகித்து வருகின்றார்.
இலங்கை வங்கி 2024ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக 106.9 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்து ஓர் வரலாற்று மைல் கல்லை அடைந்துள்ளது. இதுவே இலங்கையில் வணிக வங்கியொன்று இதுவரை பதிவு செய்த ஆகக்கூடிய வரிக்கு முந்தைய இலாபமாகவும் இலங்கையில் அரச அல்லது தனியார் நிறுவனமொன்று இதுவரை அடைந்த அதிகூடிய இலாபமாகவும் காணப்படுகின்றது. 2025ஆம் ஆண்டு பிராண்ட் பைனான்ஸ் லங்கா 57.4 பில்லியன் ரூபாய் வியாபார நாம பெறுமதியைக் கொண்ட இலங்கை வங்கியை இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வியாபார நாமமாக அறிவித்தது.
திரு.காவிந்த ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை வங்கியின் துணை நிறுவனமான (SMF9), வரையறுக்கப்பட்ட ப்ரோபட்டி டெவெலப்மன்ட் நிறுவனம் மற்றும் BOC IT சொலுஷன் என்பவற்றின் தலைவராகவும்/ நிர்வாகம் சாரா பணிப்பாளராகவும் உள்ளார்.
இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் (CIMA UK) (பணிப்பாளர் சபை) உலகளாவிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். (CIMA & AICPA ஒன்றிணைந்து உலகின் மிகப்பெரிய கணக்கியல் அமைப்பாக உள்ளன). திரு காவிந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு வங்கியியல் அனுபவத்தையும், முகாமைத்துவத்தில் 25ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தையும் கொண்டுள்ள தொழில்முறை வங்கியாளராக விளங்குகிறார். உள்ளூர் மற்றும் சர்வதேச வங்கியியலை வெற்றிகரமாக வழிநடாத்தியுள்ள திரு.காவிந்த, மூத்த தலைமைப் பதவிகளையும் வகித்துள்ளார். இவர் இலங்கையிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையில் (AmCham) பணிப்பாளராக பதவி வகித்துள்ளார்.
இலங்கை வங்கியில் பணியாற்றுவதற்கு முன்பு திரு.காவிந்த, இலங்கையிலுள்ள சிட்டி பாங்க் என்.ஏ. (Citibank N.A) துணை நிறுவனத்தின் பணிப்பாளராகவும், அவ்வங்கியின் இலங்கைக்கான வணிகத் தலைவராகவும் பணியாற்றினார். Citibank N.Aஇல் இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றிய காலத்தில், இவர் இலங்கைக்கான முகாமைத்துவக் குழு மற்றும் நிர்வாகக் குழுக்களின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அவ்வங்கியில் இவர் மூலோபாயத் திட்டங்களை உருவாக்குதல், செயற்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல் என்பவற்றோடு பெருநிறுவன நிதி மற்றும் மூலதன சந்தை பரிவர்த்தனைகள், இணைத்தல் மற்றும் விலைக்கு வாங்குதல், ஆலோசனை மற்றும் டிஜிற்றல் மயமாக்கலை ஊக்குவித்தல என்பவற்றையும் வழிநடாத்தியுள்ளார். சிட்டி பாங்க் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, இவர் தேசிய அபிவிருத்தி வங்கி (NDB), நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (NTB) மற்றும் செலான் வங்கி ஆகியவற்றில் பதவிகளை வகித்துள்ளார்.
இவர் பெருநிறுவன மற்றும் முதலீட்டு வங்கியியல், டிஜிற்றல் மயமாக்கல், இடர் முகாமைத்துவம், மூலோபாய திட்டமிடல், இணைத்தல் மற்றும் விலைக்கு வாங்குதல், ஆலோசனை, மூலதன சந்தைகள், முகாமைத்துவ கணக்கியல், அபிவிருத்தி வங்கியியல், செயற்திட்ட நிதி, SME கடன் வழங்கல், வங்கிச் செயற்பாடுகள், வர்த்தகம், ECA நிதியளித்தல், கணக்காய்வு, பண முகாமைத்துவம், மற்றும் திறைசேரி (FICC உற்பத்தி தீர்வுகள்) ஆகிய துறைகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
திரு. காவிந்த சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில்முறை கணக்காளர்கள் அமைப்பின் (AICPA) MESANA பிராந்திய ஈடுபாட்டுக் குழுவின் 2022/23 ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவி வகித்துள்ளார். 2011ஆம் ஆண்டு தொடக்கம், திரு. கவிந்தா CIMA உலகளாவிய உறுப்பினர் குழுவின் உறுப்பினராகவும் அதன் அங்கத்துவ மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட உறுப்பினராகவும் உள்ளதோடு, இவர் அவ்வமைப்பில் முன்னர் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திரு.காவிந்த இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் தலைமை தேர்வாளராகவும், மதிப்பீட்டாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் றுஹுணு பல்கலைக்கழகத்தில் MBA திட்டங்களுக்கான வருகை விரிவுரையாளராகவும் உள்ளார்.
கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள்
- கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி (சிறப்புத் தேர்ச்சி) பட்டத்தை பெற்றுள்ளதுடன், தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
- ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்து கணக்காளர்கள் நிறுவகத்தின் (CIMA) உறுப்பினராவார்.
- ஐக்கிய இராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (CIM) உறுப்பினர்.
- இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் (IBSL) உறுப்பினராவார்.
- இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவகத்தின் (CMA) உறுப்பினராவார்.
- பட்டய உலகளாவிய முகாமைத்துவ கணக்காளர் (CGMA) - AICPA & CIMA.
- இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் (SLID) உறுப்பினராவார்.
- இங்கிலாந்தில் ICAEW மற்றும் நிர்வாகமற்ற பணிப்பாளர்கள் அமைப்பு (NEDA) இணைந்து வழங்கிய ICAEW நிர்வாகமற்ற பணிப்பாளர்கள் சான்றுபடுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
- சிகாகோ பல்கலைக்கழக பூத் வணிகப் பள்ளியில் "தரவு மற்றும் பகுப்பாய்வுகளுடன் வழிநடாத்தல்" எனும் நிர்வாகக் கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இவர் மொறட்டுவை புனித செபாஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவருமாவார்.
திரு. கவிந்தா அணியாக செயற்படுபவராகவும் புத்தாக்கத்தை விரும்பும் நபராகவும் அறியப்படுகிறார். இவர் நெறிமுறைகள், இணக்கம், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈடுபாடு (DEI) ஆகியவற்றை ஆதரிப்பதுடன், சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG), விசேடத் திறமை மற்றும் சுறுசுறுப்பான செயற்திறன் என்பவற்றில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்.