director-image

திரு. ஜெஹான் இஸ்மாயில்

நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளர்

திரு. ஜெஹான் இஸ்மாயில் 2024 பெப்ரவரி 07ஆம் திகதி இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஆசியாவிலும் சில மேற்கத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வணிக வங்கியியல் மற்றும் முதலீட்டு வங்கியற் துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. இஸ்மாயில் அவர்கள் சிறிய மற்றும் பேரளவிலான முதலீட்டு வங்கிகளை முகாமை செய்வது தொடக்கம் பெருநிறுவன வங்கிப் பிரிவுகள், பல்வேறு நாடுகளிலான செயற்பாடுகள், சர்வதேச வர்த்தகப் பிரிவுகள், கட்டுப்பாட்டு (கணக்காய்வு) தொழிற்பாடுகள், இணக்கம் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவுகள் என்பவற்றை முகாமை செய்வது வரை பல்வேறுபட்ட துறைகளிலும் அனுபவங்களைக் கொண்டுள்ளார். மேலும் இவர் பயிற்சி நிறைவேற்று அதிகாரியாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

பொதுச் செயற்பாடுகள், தகவற் தொழிநுட்பம், ஆதனம், இணக்கம், சட்டம், மோசடி தடுப்பு, தொழிற்பாடுசார் இடர், பௌதீகப் பாதுகாப்பு, உள்ளகக் கட்டுப்பாடு, வியாபார மாற்றம், வியாபார முறைமைகள் முதலான துணைச் சேவைகளை மேற்பார்வை செய்துள்ள திரு.இஸ்மாயில் பாரிய முறைமைசார் கருத்திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக விளங்கியுள்ளதுடன் அனைத்து முதலீட்டு வங்கியியற் துணைச் செயற்பாடுகளையும் நிறுவி இயக்குவதற்கும் பொறுப்பாக இருந்து வருகிறார்.

வங்கிசார் தொழில் அனுபவங்கள் என்று வருகையில் திரு.இஸ்மாயில் அவர்கள் HSBC கொலம்பியா, HSBC சவூதி அரேபியா ஆகிய வங்கி நிறுவனங்களின் COO பதவியையும் SABB Securities (சவூதி அரேபியா HSBC குழுமம்) நிறுவனத்தின் CEO பதவியையும் அலங்கரித்துள்ளதோடு HSBC இந்தோனேசியா நிறுவனத்தின் பெருநிறுவன வங்கிப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவராகவும் HSBC ஹொங்கொங் நிறுவனத்தின் பெருநிறுவன வங்கிப் பிரிவின் உலகத் தொடர்பு முகாமையாளராகவும் விளங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரைறுக்கப்பட்ட M Power Capital, First Capital Holdings PLC ஆகிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் விளங்கியமை இவரின் முன்னனுபவத்திற்கு அணிசேர்ப்பதாகவுள்ளது.

தற்போது பெருநிறுவன நிதியிடல், முதலீட்டு ஆலோசனைச் சேவை, தனிப்பட்ட உரிமைப் பங்கு முதலான துறைகளில் விசேடமாக ஈடுபடும் தனிச்சிறப்புமிக்க முதலீட்டு வங்கியைக் கொண்டுள்ள M Power Capital, M Power Capital Securities ஆகிய நிறுவனங்களின் தலைவராகவுள்ள திரு.இஸ்மாயில் ஆதனம் / விருந்தோம்பல் துறைகளில் இயங்கி வரும் நிறுவனங்களான வரையறுக்கப்பட்ட Common Well (தனியார்) நிறுவனம், வரையறுக்கப்பட்ட Kapitan (தனியார்) நிறுவனம் என்பவற்றிலும் வரையறுக்கப்பட்ட The Little Gym Lanka (தனியார்) நிறுவனத்திலும் பணிப்பாளராகப் பதவி வகித்து வருகிறார்.

திரு இஸ்மாயில் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வேதியற் துறையில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு) பட்டத்தைப் பெற்றுள்ளதோடு ஐக்கிய இராச்சியத்தின் வங்கியியற் பட்டய நிறுவனத்தின் முக்கிய உறுப்பினருமாவார். முகாமைத்துவப் பயிற்சி, பெருநிறுவன வங்கியியல், சொத்து முகாமைத்துவம், பங்குத் தரகுச் சேவை, பெருநிறுவன நிதியிடல், இடர் முகாமைத்துவம், இணக்கம், தொழிற்பாடுகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து HSBC வங்கியால் நடாத்தப்பட்ட பல்வேறு பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள இவர் INSEAD மற்றும் Cranfield ஆகிய கல்விக்கூடங்களில் நடைபெற்ற வெளிவாரி முகாமைத்துவம், தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார். திரு.இஸ்மாயில் வங்கியியற் தொழிற்பாடு மற்றும் வர்த்தக நிதி ஆகிய துறைகளைப் போதிக்கும் வருகைதரு விரிவுரையாளராக (வங்கியாளர் நிறுவகம்) பணியாற்றி வருவதோடு பல்தரப்பட்ட வெளிவாரி நிறுவனங்களுக்கு வங்கியியல் தொடர்பான பல அளிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு வங்கியியல் சார்ந்து பல தகைமைகளைக் கொண்டுள்ள திரு. இஸ்மாயில் இசையிலும் கோல்ப், செஸ் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டவராவார். ரொட்றிக் கழக செயற்பாடுகளில் ஆர்வம்கொண்ட இவர் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ரொட்றி கழகத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டுள்ளதோடு றோஜல் கொழும்பு கோல்ப் கழகத்தின் தலைவராகவும் விளங்கியுள்ளார்.