திரு. தர்ஷன் ஜயரத்ன
சுயாதீன நிறைவேற்றலற்றபணிப்பாளர்
திரு. தர்ஷன் ஜயரத்ன 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திரு. ஜயரத்ன இலங்கையில் உள்ள உலகின் முன்னணி சர்வதேச வங்கிகள் சிலவற்றில் 31 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டதோர் தொழில்முறை வங்கியாளர் ஆவார். இவர் திறைசேரியிலும் நிதிச் சந்தைகளிலும் 27 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டுள்ளார்.இவர் தனது தொழில்முறை வாழ்வில் திறைசேரி, முதலீட்டு முகாமைத்துவம், பணச் சந்தைகள், அந்நியச் செலாவணி மற்றும் வீத வர்த்தகம், கடன் மூலதனச் சந்தைகள், மற்றும் கட்டமைக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் பற்றிய ஆழமான புரிதலை அவர் பெற்றுக் கொண்டார்.
இவரது தொழில்முறைப் பயணம் 1993ஆம் ஆண்டில் ஏபிஎன் அம்ரோ வங்கியில் (ABN AMRO Bank) ஆரம்பமானது. அங்கு இவர் பொது வங்கிச் சேவையின் அடிப்படைக் கொள்கைகளில் உறுதியான அடித்தளத்தையும் அத்தியாவசியத் திறன்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர் 1997ஆம் ஆண்டில், வங்கியின் திறைசேரித் துறைக்கு மாற்றம் பெற்றமை, வங்கித் துறையில் அவரது எதிர்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தேவையான தளத்தை வழங்கியது.
2002 ஆம் ஆண்டில், அவர் சிட்டி வங்கியின் (Citibank) திறைசேரிப் பிரிவில் இணைந்தார். அங்கு அவர் அந்நியச் செலாவணி வர்த்தகம் மற்றும் பணச் சந்தைகள் பற்றிய தனது அறிவைப் பரப்பியதுடன், வங்கியின் திரவத்தன்மை முகாமைத்துவத்திற்கும் பொறுப்பாக இருந்தார்.
2004 ஆம் ஆண்டில் ஸ்டாண்டட் சாட்டட் வங்கியில் (Standard Chartered Bank) இணைந்த பின்னர் அவரது திறமைகள் மேலும் கூர்மையாக்கப்பட்டன. இந்நகர்வு, இரண்டு தசாப்த கால பணிக்காலத்தில் படிப்படியாக சிரேஷ்ட தலைமைப் பதவிகளை அலங்கரிப்பதற்கு வழிவகுத்தது. 2012 ஆம் ஆண்டில், இவர் ஸ்டாண்டட் சாட்டட் வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பதவி உயர்த்தப்பட்டதுடன், இலங்கைக்கான நிதிச் சந்தைகளின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியின் மூலம், இவர் நாட்டின் முகாமைத்துவக் குழு உறுப்பினராகவும் வங்கியின் பிரதான முகாமைத்துவப் பணியாளர்களில் ஒருவராகவும் உருவானார். இந்தச் சிறப்புப் பதவிகளை செப்டம்பர் 2024 வரை வகித்தார். இக்காலப்பகுதியில், மொத்த வங்கிச் சேவையின் இணைத் தலைவர், அந்நியச் செலாவணி மற்றும் வீத வர்த்தகத் தலைவர், சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவத் தலைவர், மற்றும் நிதி மற்றும் பாதுகாப்புச் சேவைகளின் தலைவர் உள்ளிட்ட மேலதிக தலைமைப் பொறுப்புகளையும் இவர் அவ்வப்போது ஏற்றுக்கொண்டார்.
திரு. ஜயரத்ன அவர்களின் கூர்மையான வணிக நுணுக்கமும் சந்தைகள், பேரியல் பொருளாதாரம் மற்றும் இடர் முகாமைத்துவம் பற்றிய ஆழமான புரிதலும், நிதிச் சந்தைகளின் வியூகத்தை நிறுவன இலக்குகளுடன் வெற்றிகரமாகச் சீரமைக்க அவருக்கு உதவியது.
பொருளாதாரச் சுழற்சிகளை முன்கூட்டியே கணிக்கும் அவரது திறனும், சந்தையின் நிலையற்ற தன்மைகளை வழிநடாத்தும் அவரது ஆற்றலும், அண்மைய நிதி நெருக்கடியின் போது மிகவும் பெறுமதிமிக்கதாக நிரூபிக்கப்பட்டது. இவர் ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கியின் வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பாதுகாப்பதிலும், அதன் ஒழுங்குமுறை உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கியப் பங்கை வகித்தார். இது அவரது உயர் தொழில்முறை மற்றும் நெறிமுறைக் கட்டுப்பாடு மட்டுமன்றி, இலங்கையின் நிதித் துறையின் முன்னேற்றத்திற்கான அவரது உறுதியான ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
திரு. ஜயரத்ன கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அத்துடன், அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் (University of Western Sydney, Australia) வணிக நிர்வாகப் முதுமாணி பட்டத்தைப் (MBA) பெற்றுள்ளார்.